Home Archive by category

குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகுகள் விபத்து : இருவர் உயிரிழப்பு, பலரை காணவில்லை

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் இரண்டு குடியேறிகள் படகுகள் மூழ்கியதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது விரைந்து செயற்பட்ட இத்தாலிய கடலோர காவல்படை இன்றைய தினம் இரண்டு உடல்களை மீட்டுள்ளதுடன் 57 பேரைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளது.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) கூற்றுப்படி, முதல் படகில் இருந்து சுமார் 28 பேர் கடலில் வீழந்து காணாமல் போயுள்ளதாகவும், இரண்டாவது படகில் இருந்து மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படகுகளும் கடந்த வியாழன் அன்று துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஒரு படகில் 48 பேரும் மற்றை படகில் 42 பேரும் பயணம் செய்துள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை நீடிப்பதால், லம்பேடுசா கடற்கரையின் பாறைப் பகுதியில் சிக்கிய சுமார் 20 பேரை மீட்க தீயணைப்புப் படை மற்றும் அல்பைன் மீட்புக் குழுக்கள் இன்றைய தினம் தயாராக இருந்தன.

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இருந்து அவர்கள் அங்கு இருக்கிறார்கள், கடுமையான காற்று காரணமாக அவர்களின் படகு பாறைகளில் சிக்கியுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கம் அவர்களுக்கு உணவு, பானம், உடைகள் மற்றும் அவசரகால வெப்பப் போர்வைகளை வழங்கியது, ஆனால், அதிக அலைகள் காரணமாக, கடலோர காவல்படை அவர்களை கடலில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

காற்று குறையவில்லை என்றால், மீட்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை 140 மீட்டர் பாறைக்கு மேலே தூக்கிச் சென்று பாதுகாப்பாக காப்பாற்ற முடிவுசெய்துள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி CNN தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு மத்திய தரைக்கடல் கடப்பது உலகிலேயே மிகவும் ஆபத்தான பாதை என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

Related Posts