Home Archive by category

365 நாட்களில் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் 365 நாட்களே இருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் சரியாக 365 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.

சாதாரணமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இருந்து கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை இந்த நிலைமையை காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நாட்டின் அனைத்து துறைகளும் அது சம்பந்தமாக கூடுதல் கவனத்தை செலுத்துவதை காணமுடியும்.

இதற்கு அமைய இன்னும் 182 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படலாம பேச பேசப்படுகிறது.

எனினும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை நிறுத்தப்பட போகும் வேட்பாளர் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட போவதில்லை என தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், ஏனைய அரசியல் கட்சிகளுடன் அந்த கட்சி உத்தியோபூர்வமற்ற வகையிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையிலான நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் நதடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி அதன் தலைவரான சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் தேசிய மக்கள் சக்தியும் அதன் தலைவரான அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளது.

இவர்களை தவிர சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைவரான டளஸ் அழகப்பெருமவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அந்த கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப்படாத சிலரையும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த சில தரப்பினர் முயற்சிகளை மேறகொண்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் அடுத்த 12 மாதங்களுக்குள் நாட்டில் ஏற்படும் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Related Posts