Home Archive by category

இரு மடங்காக அதிகரிக்கவுள்ள அரிசி விலை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒரு கிலோ அரிசியை 290 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பாரிய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதனால் ஒரு கிலோ நெல்லின் விலையை விட இரு மடங்காக அரிசியை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பதால் அரிசியின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபை நெற்பயிர்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதால் தாங்களும் நெல் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தற்போது அரசின் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசி விற்பனை செய்யப்பட்டாலும், செப்டம்பர் 18ம் திகதிக்குப் பிறகு அரிசியின் விலையை முடிவு செய்ய வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த வருடத்தின் நெல் அறுவடையில் 30,000 மெற்றிக் தொன்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதுடன் கடந்த சனிக்கிழமையன்று கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு 5000 மெற்றிக் தொன்னைத் தாண்டியுள்ளது.

மேலும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல் மொத்த அரிசியாக மாற்றப்பட்டு PMB அரிசி என்ற பெயரில் குறைந்த விலையில் சந்தைக்கு விடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related Posts