Home Archive by category

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் தென் ஆபிரிக்காவிடமும் இலங்கைக்கு படுதோல்வி

கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்குகளில் நடைபெற்றுவரும் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் இலங்கை இரண்டாவது தொடர்ச்சியான படுதோல்வியை சந்தித்தது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியை முன்னின்று நடத்தும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சனிக்கிழமை (29) நடைபெற்ற சி குழு போட்டியில் 32 - 87 என்ற கோல்கள் வித்தியாசத்தில்  இலங்கை தோல்வி அடைந்தது.

ஜெமெய்க்காவுக்கு எதிரான போட்டியில் போன்று பந்து பரமாற்றங்களில் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த இலங்கை எதிரணிக்கு 25க்கும் மேற்பட்ட கோல் போடும் இரட்டை வாய்ப்புகளைத் தாரைவார்த்து தொல்வி அடைந்தது.

முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் சகல ஆட்ட நேர பகுதிகளிலும் 10க்கும் குறைவான கோல்களையே இலங்கை புகுத்தியது.

இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினி சிவலிங்கம் ஆரம்பப் போட்டியில் சில நிமிடங்கள் மாத்திரமே விளையாடிய நிலையில் இரண்டாவது போட்டியில் விளையாடவே இல்லை.

அவருக்குப் பதிலாக திசலா அல்கம அணியில் இணைக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் தென் ஆபிரிக்கா 24 - 9 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து இரண்டாவது ஆட்ட நேர பகுதியையும் 21 - 9 என்ற கோல்கள் அடிப்படையில் தனதாக்கிக் கொண்ட தென் ஆபிரிக்கா, இடைவேளையின் போது 45 - 18 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் தென் ஆபிரிக்காவின் வேகத்திற்கும் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப் பகுதியை 6 - 23 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை பறிகொடுத்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியிலும் திறமையாக விளையாடிய தென் ஆபிரிக்கா 19 - 8 என்ற கோல்கள் கணக்கில் அப் பகுதியையும் தனதாக்கி 87 - 32 என்ற கோல்கள்  அடிப்படையில் அமோக வெற்றியீட்டியது.

இலங்கை சார்பாக திசலா அல்கம 28 முயற்சிகளில் 24 கோல்களையும்  செமினி அல்விஸ் 8 முயற்சிகளில் 7 கோல்களையும்  உதவி அணித் தலைவி துலங்கி வன்னித்திலக்க 2 முயற்சிகளில் ஒரு கோலையும் போட்டனர்.

இலங்கை அதன் கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை (30) எதிர்த்தாடவுள்ளது.

Related Posts