Home Archive by category

விம்பிள்டனில் தோல்வியடைந்த ஒன்ஸ் ஜபேருக்கு ஆறுதல் கூறிய இளவரசி கேட் மிடில்டன்

விம்பிள்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஒன்ஸ் ஜபேருக்கு இளவரசி கேட் மிடில்டன் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட போட்டிகளில் மிக முக்கியமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த 3 ஆம் தேதி லண்டனில் தொடங்கி நடந்து வந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசைப் பட்டியலில் 42ஆவது இடத்திலுள்ள செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, உலகின் முன்னணி வீரரில் ஒருவரான துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் ஒன்ஸ் ஜபேரை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்திய மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே, கடந்த ஆண்டும் எலினா ரைபாகினாவிடம் இதே விம்பிள்டன் இறுதி போட்டியில் தோல்வியுற்ற ஜபேர், இந்த முறையும் இறுதி வரை வந்து தோல்வியுற்றதால் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். குறிப்பாக ரன்னர்-அப் கேடயம் கொடுக்கப்பட்ட போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் போட்டியை காண சென்றிருந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மருமகளும், டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்மின் மனைவியுமான இளவரசி கேட் மிடில்டன், ஒன்ஸ் ஜபேர் கண் கலங்கிய போது,  உடனே ஒன்ஸ் ஜபேர் இருந்த இடத்திற்கே சென்று ஆறுதல் கூறியதோடு, அவரது கைகளை பிடித்து நம்பிக்கை கொடுத்து அன்பான சில வார்த்தைகளையும் பேசியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போல விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஒன்ஸ் ஜபேர் தோல்வியுற்ற போது கேட் மிடில்டன் ஆறுதல் கூறி இருந்த நிலையில், இந்த முறையும் இதே மாதிரியான நிகழ்வு நடந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோவை விம்பிள்டன் அதன் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது இது வைரலாகி வருகிறது.

Related Posts