Home Archive by category

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கைக்கு 95 ஆவது இடம் கிடைத்துள்ளது.

Henley Passport Index வெளியிட்டுள்ள தரவுகளின் படி இலங்கை லிபியாவுடன் 95 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.

லண்டனின் குடிவரவு ஆலோசனை நிறுவனமான Henley Passport Index ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிடுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பட்டியலில் முதன் முறையாக ஜப்பான் முதல் இடத்தை இழந்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்ட்டாக உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு மூலம், உலகில் உள்ள 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் ஜப்பான் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பானிய கடவுச்சீட்டு மூலம், விசா இல்லாமல் 189 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளன.

இந்த மூன்று நாடுகளின் கடவுச்சீட்டு உள்ளவர்கள் உலகின் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானுடன், ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

கடவுச்சீட்டுகளின் தரவரிசையின்படி, நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டு டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு ஆகும்.

இந்த நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

பெல்ஜியம், செக் குடியரசு, மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர்கள் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இந்த நாடுகளின் கடவுச்சீட்டு தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசையில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர்கள் விசா இல்லாமல் உலகின் 57 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.

இந்தப் பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் தரவரிசை 63 ஆகவும், பாகிஸ்தானின் தரவரிசை 100 ஆகவும் உள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர்கள் 80 நாடுகளுக்கும், பாகிஸ்தான் மக்கள் 33 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணம் செய்ய முடிவும்.

ஒரு நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு, அது எந்தெந்த நாடுகளில் விசா இல்லாத நுழைவைப் பெறுகிறது என்பதைப் பொறுத்து தரப்படுத்தப்படுகின்றது.

Related Posts