ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இன்று (17) ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.
அதனடிப்படையில் இன்று (ஜூலை-17) அக்னி தீர்த்த கடற்கரையில் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அக்கினி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டினை செய்தவர்கள், அதன் பின் கோவிலுக்குள்ளே அமைந்திருக்கும் 22 புன்னிய திருத்தங்களில் புனித நீராடி, ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பாதுகாப்பு பணியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.