Home Archive by category

வளர்ப்பு நாயுடன் பசுபிக் கடலில் 2 மாதங்கள் வசித்த நபர் மீட்பு

பசுபிக் கடலில் சிக்கி உயிர் பிழைத்த நபர் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிட்னியில் வசிக்கும் 51 வயதான டிம் ஷெடாக் தனது வளர்ப்பு நாயான பெல்லாவுடன் பிரெஞ்சு பாலீசீனியாவிற்கு செல்ல மெக்ஸிகோவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் கிளம்பியுள்ளார்.

மெக்சிகோவின் லா பாஸ் நகரிலிருந்து 6,000 கிமீ நீளமான (3,728 மைல்) பயணத்தைத் தொடங்கிய ஷெடாக்கின் படகு மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டது.

சில வாரங்கள் கடலிலேயே சிக்கி இருந்த அவர்களை, இந்த வாரம் ஒரு ஹெலிகாப்டர் கண்டடைந்தது. இதன் பின் இழுவை படகு மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“நான் கடலில் மிக மோசமான சூழ்நிலையை அனுபவித்துள்ளேன். நான் நீண்ட காலமாக கடலில் தனியாக இருந்தேன்.

 

எனக்கு ஓய்வு மற்றும் நல்ல உணவு தேவை, மற்றபடி நான் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன்” என்றார்.

கடலில் இருந்த காலம் குறித்து அவர் கூறுகையில், “மீன்பிடி சாதனங்களே தான் உயிர் வாழ உதவியது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், படகில் இருந்த விதானத்தின் (வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பயன்படும் தார்பாய் போன்ற பொருள்) அடியில் தங்கி இருந்ததால் என்னால் வெயிலில் இருந்து தப்பிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரால் சிறிதளவு உணவை உட்கொள்ள முடிகிறது என அவரை மீட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரை மீட்ட இழுவை படகு மூலம் அவர் மீண்டும் மெக்ஸிகோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts