மணிப்பூரில் துப்பாக்கிச் சூட்டில் காவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காவலர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி இனத்தவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உட்பட பல்வேறு இனத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது கலவரமாக மாறி பலர் வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பொது சொத்துகளும் நாசமாகி வருகின்றன.
மணிப்பூரில் கலவரம் தொடங்கியது முதல் இதுவரை விஷ்ணுபூர் மாவட்டத்தின் கங்க்வி பகுதிதான் மிகவும் பதற்றமாக காணப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் மைதேயி மற்றும் குகி, நாகா இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. இதில் பழங்குடியின தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் காவலர் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து உடனடியாக அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கலவரக் காரர்கள் வனப் பகுதிகளில் மறைந்திருந்து திடீர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், மற்ற மாவட்டங்களில் நிலைமை அமைதியாகக் காணப்படுகிறது என்று மாநில அரசு கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இம்பாலின் கிழக்கு, மேற்கு, சுராசந்த்பூர், விஷ்ணுபூர், கக்சிங் மாவட்டங் களில் தீவிரவாதிகள் அமைத் திருந்த பதுங்கு குழிகளை ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டபதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாக ராணுவம் மற்றும் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், மணிப்பூர் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்புப் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாகனங்களுக்கு தீ வைப்பு: மணிப்பூரின் கங்க்லா கேட்டை அருகே மகாபலி ரோட்டில் இரண்டு வாகனங்களுக்கு நேற்று முன்தினம் இரவு 200 பேர் கொண்ட கும்பல் தீ வைத்தது. உடனே அந்த இடத்துக்கு போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் விரைந் தனர். போராட்டக் காரர்களை கலைந்து செல்லும்படி, போலீஸார் எச்சரித்தனர்.
இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலர் போலீஸாரின் துப்பாக்கிகளை பறிக்க முயன்றனர். இதனால் அவர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும் இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
200 பேர் கும்பல்: பின்னர் சம்பவ இடத்துக்குராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். இதற்கிடையில் பேலஸ்காம்பவுண்ட் பகுதியில் 200 பேர் குவிந்தனர். இவர்களை நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். மீண்டும் கும்பல் கூடுவதைத் தடுக்க ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இம்பால் கிழக்கு மாவட்டத்தில் யாயின்கங்போக்பி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை துப்பாக்கிசத்தம் விட்டு விட்டு கேட்டது. இப்பகுதியை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விஷ்ணுபூர் மாவட்டத்தின் கங்க்வி பகுதிதான் மிகவும் பதற்றமாக காணப்படுகிறது.