கிழக்கு லடாக் பகுதியில் வீரர்கள் போர் பயிற்சி - பீரங்கிகள், கவச வாகனங்கள் குவிப்பு
லடாக் எல்லையில் இந்தியா மீண்டும் ஆயுதங்களை குவித்து வருகின்றது
கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்து மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை இந்திய வீர்ர்கள் முறியடித்தனர்.அதன் பிறகு அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பும் ராணுவத்தையும் போர் தளவாடங்களையும் குவித்தன. அதன் பிறகு இருதரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் இருதரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டன.
எனினும், வரும் காலத்தில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அவசரநிலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்காக அங்கு நவீன ஆயுதங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், லடாக் பகுதியில் டி-90, டி-72 டாங்கிகள் மற்றும் பிஎம்பி உட்பட மேலும் சில ராணுவ டாங்கிகள், கவச வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு வீரர்கள் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள சிந்து நதியைத் தாண்டி சென்று எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்த பயிற்சி அமைந்தது.
எதிரிகள் (சீன ராணுவம்) அத்துமீறி நுழைந்து இந்திய பகுதியை ஆக்கிரமிக்க முயன்றால் அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு தயாராகும் வகையில் இந்த பயிற்சி அமைந்தது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனுஷ் ஹோவிட்சர், 114 துப்பாக்கிகள், இந்திய தயா ரிப்பான எம்4 க்விக் ரியாக்சன் போர்ஸ் வாகனம், கண்காணிப்பை மேற்கொள்வதற்கான டாடா ரஜக் சிஸ்டம் உள்ளிட்டவை லடாக்கில் தயார் நிலையில் உள்ளன.