Home Archive by category

3 ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சம அளவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து

லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது. 

கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட முதல் இரண்டு டெஸ்ட் போட்டிளில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை (2 - 0) வகிக்கிறது.

ஆனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த இரண்டு அணிகளும் குறைந்த மொத்த எண்ணிக்கைகளையே பெற்றுள்ளன. 

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 24 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளதன் மூலம் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் வெளிப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 263 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை (08) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மீதமிருந்த 7 விக்கெட்களை இழந்து மேலதிகமாக 174 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு சேர்த்தது.

அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மாத்திரமே திறமையாக துடுப்பெடுத்தாடி 80 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட ஸக் க்ரோவ்லி (33), மார்க் வூட் (24), மொயீன் அலி (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அணித் தலைவர் பெட் கமின்ஸ் 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 26 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதமிருக்க 152 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

உஸ்மான் கவாஜா 43 ஓட்டங்களையும் மார்னுஸ் லபுஸ்சான் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

ட்ரவிஸ் ஹெட் 18 ஓட்டங்களுடனும் முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த மிச்செல் மார்ஷ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மொயீன் அலி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

Related Posts