Home Archive by category

ரஞ்சன் வெளியே வருகிறார்

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது 27ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இது தொடர்பில் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தானும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்நிலையில்,   நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி   நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை இன்று (25) சமர்ப்பித்துள்ளார்.

அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க 2017  ஒகஸ்ட் 21 ஆம் திகதி கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து, நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து 2021 ஜனவரி 12  ஆம் திகதியன்று  தீர்ப்பளித்தது. இதுவரை, ராமநாயக்கவின் தண்டனைக் காலம் ஒரு வருடமும் 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

அலரிமாளிகைக்கு வெளியில் தாம் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது, இழிவானது மட்டுமன்றி  ஒட்டுமொத்த நீதித்துறையையும்  அவமதிக்கும் வகையிலானது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அது தொடர்பில்  முழு நீதித்துறையிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2017 ஆகஸ்ட் 21ஆம் திகதி தாம் வெளியிட்ட கருத்தை, மீளப் பெறப் போவதில்லை எனக் கூறி, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூறிய கருத்திற்கும் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அத்துடன், தனது வாழ்நாளில், ஒட்டுமொத்த நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அல்லது இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் சத்தியக் கடதாசியில்  உறுதியளித்துள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார்.

Related Posts