இந்தியாவில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கோயம்புத்தூர் அருகே உள்ள குனியமுத்தூரில் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு, ஏற்கெனவே இருந்த பக்கவாட்டுச் சுவரை ஒட்டி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதில், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (4ம் திகதி) மாலை 5.30 மணிக்கு அந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஜெட்லி ஜெகநாதன் (53), நகேலா சத்தியன் (45), ரபக்கா கண்ணையா (49), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஷ் கோஸ்ன் (42) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மேலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அருண் கோஷ் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து குனியமுத்தூர் பொலிசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கும், படுகாயமடைந்தவரை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தனர்.