Home Archive by category

ஸிம்பாப்வேயையும் அதிரவைத்து உலகக்கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது ஸ்கொட்லாந்து

புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் வரவேற்பு நாடான ஸிம்பாப்வேயை 31 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ஸ்கொட்லாந்து, தனது உலகக் கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

மைக்கல் லீஸ்க், ப்றெண்டன் மெக்முலென் ஆகியொரின் சகலதுறை ஆட்டங்கள், கிறிஸ் சோலின் சிறப்பான பந்துவீச்சு என்பன ஸ்கொட்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இந்த வருட உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகளைத் தொடர்ந்து இப்போது மூன்றாவதாக முழு அந்தஸ்துடைய ஸிம்பாப்வேயை ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டு வரலாறு படைத்துள்ளது.

இந்தத் தோல்வியை அடுத்து ஸிம்பாப்வேயின் உலகக் கிண்ண எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி முடிவுடன் சுப்பர் 6 அணிகள் நிலையில் இலங்கைக்கு (8 புள்ளிகள்) அடுத்தபடியாக 6 புள்ளிகளைப் பெற்றுள்ள ஸ்கொட்லாந்து 0.296 என்ற நிகர ஓட்ட வேகத்துடன்  2ஆம் இடத்தில் இருக்கிறது. ஸிம்பாப்வேயும் 6 புள்ளிகள் பெற்றுள்ளபோதிலும் அதன் நிகர ஓட்ட வேகம் (எதிர்மறை) -0.099 ஆக இருக்கிறது. 4 புள்ளிகளைப் பெற்றுள்ள நெதர்லாந்து -0.042 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் 4ஆம் இடத்தில் இருக்கிறது.

எனவே ஸ்கொட்லாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான சுப்பர் 6 போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையுடன் பங்குபற்ற தகுதிபெறும். ஆனால், நெதர்லாந்து மிகப் பெரிய வெற்றியை ஈட்ட வேண்டிவரும்.

இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 235 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 41.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203  ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வேயின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

முதல் பந்திலேயே ஆரம்ப வீரர் ஜோய்லோர்ட் கம்பீயின் விக்கெட்டை இழந்த ஸிம்பாப்வே, 8ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

அணித் தலைவர் க்றெய்க் ஏர்வின் (2), இனசன்ட் காலா (12), ஸிம்பாப்வேயின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சோன் வில்லிம்ஸ் (12) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

சிக்கந்தர் ராஸாவும் ரெயான் பியூரியும் 5ஆவது விக்கெட்டில் பொறுமையுடன் துடுப்பெடுததாடி 60 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த சிக்கந்தர் ராஸா 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது ஸிம்பாப்வேக்கு பேரிடியாக அமைந்தது. (91 - 5 விக்.)

இந் நிலையில் ரெயான் பியூரியும் வெஸ்லி மதேவியரும் 6ஆவது விக்கெட்டில் 74 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய  மதேவியர் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபக்கத்தில் ரெயான் பியூரி சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தது ஸிம்பாப்வேக்கு சற்று தெம்பூட்டுவதாக அமைந்தது.

ஆனால், மொத்த எண்ணிக்கை 197 ஓட்டங்களாக இருந்தபோது ரெயான் பியூரி 83 ஓட்டங்களுடன் 9ஆவதாக ஆட்டம் இழக்க ஸிம்பாப்வேயின் உலகக் கிண்ண கனவும் தவிடு பொடியானது.

பந்துவீச்சில் கிறிஸ் சோல் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றெண்டன் மெக்முலென் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் லீஸ்க் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த 234 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்கள் நால்வர், மத்திய வரிசைசையில் ஒருவர், பின்வரிசையில் ஒருவர் என 6 வீரர்கள் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதன் பலனாகவே ஸ்கொட்லாந்து இந்த மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ஆனால், அதன் ஓட்ட வேகம் ஓவருக்கு 4.68 ஓட்டங்களாக இருந்தது.

கிறிஸ்டோபர் மெக்ப்றைட், மெத்யூ க்ரொஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இதுவே ஸ்கொட்லாந்தின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டு இணைப்பாட்டங்கள் தலா 46 ஓட்டங்களைக் கொண்டிருந்தன.

மெத்யூ க்ரொஸ், ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டிலும் மைக்கல் லீஸ்க், மார்க் வொட் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டிலும் தலா 46 ஓடட்ஙகளைப் பகிர்ந்தனர்.

மத்தியவரிசை வீரர் மைக்கல் லீஸ்க் (48), முன்வரிசை விரர்களான மெத்யூ க்ரொஸ் (38), ப்றெண்டன் மெக்முலென் (34), ஜோர்ஜ் மன்சே (31), கிறிஸ்டோபர் மெக்ப்றைட் (28), பின்வரிசை வீரர் மார்க் வொட் (21 ஆ.இ.) ஆகியோர் 20 ஓட்டங்களுக்குமேல் பெற்றனர்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சோன் வில்லியம்ஸ் 41 ஓட்டங்களுக்கு 3 விககெட்களையும் டெண்டாய் சட்டாரா 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related Posts