உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது' - மணிப்பூரில் நிவாரண முகாமை பார்வையிட்டது குறித்து ராகுல் காந்தி கருத்து
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்தது பற்றிய அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "அங்கே (நிவாரண முகாம்கள்) நான் பார்த்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி, குழந்தையின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது. மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி. மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும். நம் அனைவரின் முயற்சிகளும் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒன்றிணைய வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ள ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் மைதேயி சமூக மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்
இந்நிலையில் ராகுல் காந்தி இரு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அவர் சென்ற போது பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அவர் இம்பால் திரும்பினார்.
இந்நிலையில் மொய்ராங் என்ற இடத்தில் உள்ள நிவாரண முகாமிற்கு ராகுல்காந்தி இன்று சென்றார். அங்கு தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் கலவரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்