Home Archive by category

விஜய்க்கு எதிராக நான் பேசவில்லை: ஆனால் இதை நாம் தொடர்ந்து செய்கிறோம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிராக நான் பேசவில்லை என்றும் திரைத்துறையில் செல்வாக்கு குறைந்த பிறகு அரசியலுக்கு வருவதை சுரண்டல் உளவியலாக பார்க்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது : “ நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. எதிராக பார்க்கவில்லை.  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று சொன்னபோது நான் வரவேற்றேன். அதுபோல விஜய் அரசியலுக்கு வருவார் என்று யூகங்களால் பேசியபோதும் அதை நான் வரவேற்றேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோல ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல மேடைகளில் கலைஞர்கள் கூட பாடியிருக்கிறார்கள். ‘தமிழர்கள் தங்கள் தலைவர்களை திரையரங்கில் தேடுகிறார்கள்’ என்று. அதற்கு காரணம் தமிழக அரசியல் நீண்ட காலமாகவே திரையுலகத்தை சார்ந்தே இருக்கிறது.

திரையுலக நடத்திரங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. அந்திராவில் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார். மற்ற மாநிலங்களில் சூப்பர் ஸ்டார்கள், யாரும் தனக்கு முடியாத கடைசி காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. அடிமட்டம் வரை சென்று மக்களுக்காக போராட்டம் செய்ய வேண்டும் என்றோ, வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றோ எந்த தேவையுமில்லை என்று நினைத்துக்கொண்டு, சினிமாவில் கிடைத்த செல்வாக்கு மூலம் அரசியலுக்கு வரலாம், அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

இதுபோன்ற கணக்குகளை வைத்துகொண்டு மற்ற மாநிலங்களில் யாரும் செயல்படவில்லை. இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேன். இது நடிகர் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் இல்லை. பொதுவான விமர்சனம். நல்லகண்ணு போன்ற தலைவர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் விடுதலை போராட்ட காலத்தில் சந்தித்த கொடுமைகள் மற்றும் சிறைச்சாலை சென்றது பற்றி நாம் அறிவோம். 98 வயதிலும் அரசியல் மேடைகளில் பேசுகிறார். அவர் தொடாத பிரச்சனை இல்லை. அவர் போராடாத களங்கள் இல்லை. இதுபோன்ற எந்த விஷயங்களில் ஈடுபடாமல் நேரடியாக அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பதை பற்றிதான் நான் பேசினேன். முடிந்த வரை சினிமாவில் பணத்தை பெற்று, புகழை பெற்றதும், மார்க்கெட் சென்ற பிறகு அரசியலுக்கு வருவது ஒருவகையான சுரண்டும் உளவியலாக நான் பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.  

Related Posts