Home Archive by category

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் அபராதம்

இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மந்தகதியில் ஓவர்கள் வீசப்பட்டதற்காக இரண்டு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் 40 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலா 2 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் ஓவர்களை வீசுவதற்கு ஒதுக்கப்பட்ட மேலதிக நேரம் உட்பட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு அணிகளும் தலா 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததாக போட்டி பொது மத்தியஸ்தர் அண்டி பைக்ரொவ்ட் தீர்மானித்து இந்த அபராதங்களை விதித்தார்.

ஐசிசி ஒழுக்கக் கோவையில் இலக்கம் 2.22இல் வீரர்களுக்கும் வீரர்களின் உதவியாளர்களுக்கும் குறித்துரைக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஓவர்களுடன் தொடர்புபட்ட விதிகளின் பிரகாரம் குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களுக்கு 20 வீத அபாரதம் விதிக்கப்படும்.

அதேபோன்று ஐசிசி ஒழுக்கக் கோவையில் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் விளையாட்டு நிலைமைகளுக்கென இலக்கம் 16.11.2இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளில்  ஒரு புள்ளி   அபரதமாக கழிக்கப்படும். இதற்கு அமைய இரண்டு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் அபராதமாக ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளில்  கழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு 12 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளில் 2 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்துக்கு 2 எதிர்மறை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளினதும் தலைவர்களான பெட் கமின்ஸும் பென் ஸ்டோக்ஸும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டு அபராதங்களை ஏற்றுக்கொண்டதால் சம்பிரதாயபூர்வ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

கள மத்தியஸ்தர்களான அஹ்சான் ராஸா, மராய்ஸ் இரேஸ்மஸ், மூன்றாவது மத்தியஸ்தர் க்றிஸ் க்ரபானி, நான்காவது மத்தியஸ்தர் மைக் பேர்ன்ஸ் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்தனர்.

Related Posts