இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் உருவாக்க நடவடிக்கை
இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று(20) நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்துக்கும் எலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையில் அண்மையில் முரண்பாடுகள் எழுந்த நிலையில் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு ஒரு சாதகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
தனது மின்சாரவாகன உற்பத்திக்கூடம் இயலுமானவரை விரைவில் இந்தியாவில் நிர்மாணிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மஸ்கின் மின்சார வாகனத்துறை மற்றும் வணிக விண்வெளித் துறையை மையப்படுத்திய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் வகையில் நேற்று மோடி அவருடன் கலந்துரையாடலை நடத்திய விடயத்தையும் இந்திய அரசாங்கம் தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளது.
தான் ஒரு மோடியின் ரசிகர் எனக்குறிப்பிட்ட மஸ்க் உலகில் உள்ள எந்த பெரிய நாட்டையும் விட இந்தியா அதிக கடப்பாடுகளை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு சென்ற நிலையில் தற்போது இந்தியாவிலும் முக்கிய முதலீடுகளைச் செய்ய அவர் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா இந்தியாவில் மின்சார வாகனங்களை உருவாக்கவும் அவற்றுக்குரிய மின்கலங்களை உருவாக்கவும் தொழிற்கூடமொன்றை நிறுவ திட்டமிட்டிருந்தாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.