Home Archive by category

திருக்கேதீஸ்வர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தி, மன்னார் நீதவான் முன்னிலையிலே பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக அமெரிக்காவில் உள்ள புளோரிடா நிறுவனத்தில் ‘சி-14 காபன்’ பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் வழங்கு தொடுனர் சார்பாக எடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த தவணை அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்களை பகுந்தெடுத்து பகுப்பாய்வு நடவடிக்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வழக்கு தொடுனர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் அவ்வாறான பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு அல்லது மன்னார் நீதவான் அதற்கு உறுதுணை புரிந்து அவரின் மேற்பார்வையின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கான கட்டளை இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தி, மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.- என்றார்.

Related Posts