Home Archive by category

இடைக்கால நிர்வாக சபை என்பது தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கு தீர்வல்ல

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகக் கோரிக்கை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையல்ல. அது 13 ஆவது திருத்தத்தில் இருந்து, பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நோக்கம் உடையது என  தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாகாணங்களை இயக்க இடைக்கால நிர்வாக சபை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த வியாழக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை தான் சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இடைக்கால நிர்வாக சபை என்பது தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கு தீர்வல்ல, ஏற்கனவே பதிமூன்றாவது சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட சரத்துகளை மீளவும் பெறுவதற்கான நோக்கமுடையது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் நடத்தப்படாததால் இயங்காமல் உள்ள மாகாண சபைகளை மீளவும் நிர்வகிக்க வேண்டும். மாகாண சபைகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கயைில்

“13-வது திருத்த சட்டத்தின் கீழ் தரப்பட்ட பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

மாகாண சபையின் நிர்வாகத்திற்கு கீழ் இருந்த அதிகாரிகள் பலர் மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மாகாணத்துக்குரிய கல்லூரிகள் பலவற்றையும்,  மருத்துவமனைகளையும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது.

எனவே பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணங்களுக்கு மீண்டும் வழங்கும் நோக்கில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

அவர்களின் அறிவுரையை பெற்று அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகாணங்களிடம் பறிபோன அதிகாரங்களை மீள அளித்து மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.

பலப்படுத்தப்பட்ட , திருத்தப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Related Posts