Home Archive by category

பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த இலங்கை தாயார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் என்பரை நாட்டிற்கு அனுப்புவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தனின் தாயார் மீண்டும் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

தாயின் பாசத்தை உணர்ந்த இந்திய பிரதமர் தனது கோரிக்கையை தயவில் கொள்ள வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, விடுதலையான சாந்தன் எனப்படும் ரி.சுதேந்திரராஜா, சொந்த நாடான இலங்கைக்கு திரும்ப முடியாமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி சக இலங்கையர்களான முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோருடன் விடுதலை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்தும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சூரிய ஒளிகூட தொடாத வகையில் சிறப்பு முகாமிற்குள் தமது வாழ்க்கை செல்கின்றது எனவும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் சாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அல்லது அடையாளச் சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தை அணுகுவதற்கு அனுமதிக்குமாறு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதிய போதிலும் அவற்றுக்கு எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடந்த 06 மாதங்களாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் 120 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களில் 90 வீதமானவர்கள் இலங்கை தமிழர்கள் எனவும் சாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 32 ஆண்டுகளாக தாயாரை பார்க்கவில்லை எனவும் தந்தையின் இறுதி ஆண்டுகளில் அவருடன் இருக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது தாயாரின் இறுதிக் காலகட்டத்தில் அவருடன் இருக்க வேண்டும் என விரும்புவது தவறா எனக் கேள்வி எழுப்பியுள்ள சாந்தன், தனது ஆசை தவறு என்றால் அதற்கு யாரும் ஆதரவு வழங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அவரது தாயார் கோரியுள்ளார்.

Related Posts