Home Archive by category

ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் காஞ்சி மடத்திலிருந்து எச்சரிக்கை; சுயசரிதை புத்தகத்தில் டி.என்.சேஷன் அதிர்ச்சி தகவல்

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடந்த 2019-ம் ஆண்டு மறைந்த நிலையில் கடந்த வாரம் அவரின் சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகம் வெளியானது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒருவாரம் முன்பு ராஜீவ் காந்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சி சங்கர மடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டதாக சேஷன் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தில் இது குறித்து டி.என்.சேஷன் குறிப்பிட்டுள்ளதாவது ”1991-ம் ஆண்டு மே 10-ம் தேதி ராஜீவ் காந்தியை தொடர்புகொண்டு தனிப்பட்ட முறையில் எச்சரித்தேன். திறந்தவெளியில் பிரசாரம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கு நான் இரு முறை இறக்கமாட்டேன் என சிரித்துக்கொண்டே அவர் பதிலளித்தார்.

4 நாட்கள் கழித்து மே 14-ம் தேதி ராஜீவ் காந்தியை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி காஞ்சி சங்கர மடத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் எச்சரித்தும் அவர் பிரசாரம் செய்கிறார் என பதிலளித்தேன். இது குறித்து உடனடியாக அவருக்கு தந்தி அனுப்பினேன். அது மே 17-ம் தேதி அவரின் மேசைக்குச் சென்றது. ஆனால் அதை படிப்பதற்கு முன்பே மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். நான் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தேன். அவரின் இறுதி சடங்கில் பங்கேற்காமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தேன்” இவ்வாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1988-89ம் ஆண்டில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.என்.சேஷன் சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட முன்வரைவை தயார் செய்து தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின்படி பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் முன்னாள் பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி இந்த சட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து சேஷன் தனது புத்தகத்தில் ”மக்கள் சுயநலத்துடன் இந்த சட்டத்தை நிறைவேற்றியதாக கருதுவார்கள் என நினைத்த ராஜீவ் காந்தி பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு மட்டும் பொருந்தும் வகையில் இச்சட்டத்தை இயற்றுமாறு அறிவுறுத்தினார். முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்துக்கு தேவையில்லை” என கூறியதாக டி.என்.சேஷன் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts