மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்; பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பி யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற மல்யுத்த வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் போடவும் முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதக்கங்கள் வீசும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக எம் பி யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அச்சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.