தொடரை சமப்படுத்தியது இலங்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றகல்களை வெளிப்படுத்திய இலங்கை 132 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.
தோல்வியிலிருந்து விரைவாக மீண்டு வர முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இப் போட்டியில் விளையாடி வெற்றியீட்டிய இலங்கை தொடரை 1 - 1 என்று சமப்படுத்திக்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸர்தான், ஹஷ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து இலங்கைக்கு சவால் விடுத்த போதிலும் தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களையம் துஷ்மன்த சமீர 2 விக்கெட்களையும் கைபற்றி தமது அணி வெற்றிபெற உதவினர்.
முன்னதாக இலங்கையின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியிருந்தனர்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 324 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 42.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
16ஆவது ஓவரில் 2ஆவது விக்கெட்டை இழந்தபோது மொத்த எண்ணிக்கை 62 ஓட்டங்களாக இருந்தது.
இப்ராஹிம் ஸத்ரானும் ஹஷ்மத்துல்லா ஷஹிதியும் 3ஆவது விக்கெட்டில் 84 ஓட்டஙகளைப் பகிர்ந்த இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
ஆனால், 146 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நல்ல நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அதன் பின்னர் எஞ்சிய 8 விக்கெட்களை 45 ஓட்டங்களுக்கு இழந்து தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷஹிதி (57), இப்ராஹிம் ஸத்ரான் (54), ரஹ்மத் ஷா (36), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (28) ஆகிய நால்வரே 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 323 ஓட்டங்களைக் குவித்தது.
பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய நான்கு முன்வரிசை வீரர்களும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்தினர்.
பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக் கொடுத்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க 43 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரட்ன 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து குசல் மெண்டிஸும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
ஏஞ்சலோ மெத்யூஸுக்குப் பதிலாக இப் போட்டியில் விளையாடிய சதீர சமரவிக்ரம திறயைமாகத் துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களைப் பெற்றார்.
குசல் மெண்டிஸ் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நபி 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பரிது அஹ்மத் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.