Home Archive by category

‘மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது’: பிரியங்கா காந்தி கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைதுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த முயன்ற மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களை டெல்லி போலீஸார் கைதுசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தும் ஜந்தர் மந்தரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்த வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனர்.

இதையறிந்த டெல்லி போலீஸ் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியது. ஆனால், பேரணி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வினேஷ் போகட், அவரின் சகோதரி சங்கீதா போகட் தலைமையிலான வீராங்கனைகள் குழு, போலீஸார் வைத்திருந்த தடுப்புகளைக் கடக்க முயன்றனர். அதன் காரணமாக இதில் நடவடிக்கை எடுத்த போலீஸார், வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர்.

மேலும், வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட பல முன்னணி வீரர்களை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். மல்யுத்த வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைதுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது. மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை. அவர்களின் குரலை மத்திய அரசு இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts