Home Archive by category

'எதிர்காலத்தில் நாட்டு மக்கள் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படக் கூடும்'

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் , நாளை ஏனையோர் மீதும் பிரயோகிக்கப்படக் கூடும்.

இன்று நாட்டில் ஜனநாயகம் பெறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க உண்மையில் ஜனநாயக ரீதியான தலைவர் என்றால் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடு இன்று அவசர காலநிலைமையின் கீழ் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்தின் பின்னர் சுமார் 4 தசாப்தங்கள் நாட்டில் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறிருக்கையில் அண்மையில் அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தொடர்ந்தும் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது சர்வதேசத்திடம் சென்று பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்றும் , அதில் பாரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்திருந்தால். இன்று அவரே அதனை உபயோகித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றம் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவற்றிடம் ஜனநாயக ஆட்சி முன்னெடுக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அவ்வாறு உறுதியளித்த பின்னரே மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை கிடைக்கப் பெற்றது. எனினும் தற்போது அவர் அந்த வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு அவர் சர்வதேசத்திற்கு நிச்சயம் பதில் கூற வேண்டும்.

ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் மீது பாய்ந்துள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நாளை ஏனையோர் மீதும் பிரயோகிக்கப்படலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் ஜனநாயக தலைவர் எனில் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

Related Posts