Home Archive by category

கடவுச் சீட்டு பெறும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இலத்திரனியல் கடவுச்சீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

குறிப்பாக ஒன்லைன் வீசா விண்ணப்பத்தில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்காக, வெளிநாட்டவர்கள் சிரமமின்றி விசாவைப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் அதிக வருமானம் ஈட்டும் வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேண்டியதன் தேவை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கு அவசியமான நடவடிக்கைகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

Related Posts