தி கேரளா ஸ்டோரி பார்த்த ஆர்.என் ரவி: மெல்லிய கொடூரமான யதார்த்தம் அம்பலமானதாக ட்வீட்
ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என ஆளுநர் ரவி ட்விட்.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி வெளியானது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகள் எழுந்தன. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக் குழு கூறியது.
இப்படம் வெறுப்புணர்வை தூண்டுவதாக கூறி கேரளா, தமிழகம் உள்பட பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் படத்திற்கு கண்டனம் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து படம் வெளியானது.
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் படம் வெளியானது. படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை, எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தி கேரளா ஸ்டோரி பார்த்ததாக ட்விட் செய்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட் பதிவில், “தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளுநர் ரவியின் ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.