ஷாருக்கான் மகனை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம்?; வெளியான பரபரப்பு தகவல்கள்
நடிகர் ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 4 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு மும்பை அருகே கோர்ட்டாலியா க்ரூஸ் கப்பலில் சோதனை நடத்திய சமீர் வான்கடே தலைமையிலான என்.சி.பி அதிகாரிகள் போதைப் பொருள் பயன்படுத்தியதாக, நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஆர்யன் கானை விடுவிக்க, ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, சமீர் வான்கடே, NCB-ன் கண்காணிப்பாளர் வி.வி சிங் உள்ளிட்டோருக்கு சொந்தமான 29 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், சமீர் மற்றும் அவரது குழுவில் இருந்த இரண்டு அதிகாரிகள் முறையாக விசாரணை நடைமுறையை பின்பற்றவில்லை என்பதும், ஷாருக்கான் குடும்பத்திடம் பணம் பறிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சமீர் வான்கடே உள்ளிட்டோர் மீது சதித்திட்டம், பணம் பறிக்க முயற்சி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.