Home Archive by category

குறை பிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்; ஐ.நா. சபை தெரிவித்த அதிர்ச்சி தகவல்

போர், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் 1 கோடியே 34 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது.

 

இந்நிலையில் 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி ஆகும். இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன. இதில் கடந்த 2020-ல் வங்கதேசத்தில் குறை பிரசவம் அதிகபட்ச அளவாக (16.2%) பதிவாகி உள்ளது.

போர், பருவநிலை மாற்றம், கரோனா வைரஸ் மற்றும் விலைவாசி உயர் ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன. உதாரணமாக, காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இடர்பாடுகளை தவிர்க்க கூடுதல் முதலீடு உலக நாடுகளுக்கு தேவைப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts