Home Archive by category

இன அழிப்பிற்கான புதிய ஆதாரங்கள்; பகிரங்கப்படுத்தவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை!

தமிழர் தாயகப் பகுதி தொடர்ச்சியாக கபளீகரம் செய்யப்படுவது தொடர்பில் புதிய ஆதாரங்களை தாம் சேகரித்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் வி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, இனப்படுகொலை ஆவணப்படுத்தல் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழர் தாயகப் பகுதியில் புதிய பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டு தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழர் பூர்வீகம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் பெருமளவு முனைப்புடன் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இது தொடர்பில் 2015 மற்றும் 2016 காலப் பகுதியில், தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தல் புத்தகம் ஒன்றை தயார்ப்படுத்தி, பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

இதன் போது இது வரை வெளிவராத பல புதிய ஆதாரங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை  சேகரித்துள்ளது. அந்த வகையில், வடக்கு கிழக்கு, தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த பூர்வீக பிரதேசங்களே எனவும் இங்கே பெரும்பான்மையாக தமிழரே வாழ்ந்தார்கள் என்பதற்கான புதிய ஆதாரங்கள் பலவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறு தம்மால் சேகரிக்கப்பட்டுள்ள முக்கிய ஆணவங்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் மே-18 இன அழிப்பு நாளில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை வெளியிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழரின் இருப்பை உலக நாடுகளும் மறுக்க முடியாதபடியான ஒரு நிலையே ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு அல்ல என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை செயற்பாடுகளின் இணைப்பாளர் சண் றதீஸ் (சுதா) தெரிவித்துள்ளார்.

அதேவேளை இனப்படுகொலையாளிகளை சர்வதேச கூண்டில் ஏற்றுவதே பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையில் 1948 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்களுடன் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், பிரித்தானிய தமிழர் பேரவை, சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் இன அழிப்பு நாளான மே-18 அன்று பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் இளைஞர் யுவதிகளால், இனப்படுகொலையை எடுத்துகாட்டும் வகையிலான நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுன்றி, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts