Home Archive by category

விசாரணை என்ற பெயரில் போராளிகளின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை

விசாரணைகள் என்ற பெயரில் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர்வரும் 15ம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயமானது ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளை அரசு இன்னும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்திலே பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு ஜனநாயக வழியில் செயற்படுகின்ற அமைப்புகளை மீளவும் அச்சுறுத்தும் வகையிலே அமைந்துள்ளது. இவ்வாறான இலங்கை அரசின் முடிவுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒரு இனத்தின் ஆயத ரீதியான விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற நிலையில் யுத்தத்தின் பின்னர் பொது வெளிச் செயற்பாடுகளில் ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற போராளிகள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் தொடந்து இவ்வாறான விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்ற விடயம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியில் ஒரு அரசியற் கட்சியாக அமைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்காக அழைப்பதென்பது புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் போராளிகள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் விடயமாகும்.

தற்போதைய முள்ளிவாய்க்கால் காலப் பகுதியில் இவ்வாறான அநீதியான விசாரணைச் செயற்பாடு ஜனநாயகத்தைச் நேசிக்கும் பலரையும் கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கையாகும்.

யுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் இருந்து ஜனநாயக வழியிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தரப்புகளை இலங்கையின் பயங்கரவாதப் பிரிவு விசாரணைக்கு அழைப்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, இலங்கை இராணுவம் ஏனைய புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக போராளிகளின் வீடுகளுக்குச் செல்வதும், விசாரணை என்ற பெயரில் அழைப்பதும் ஒரு சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்துகின்றது.

இந்த வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையிலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாட்டை ஜனநாயக ரீதியாக நாங்கள் வன்மையகக் கண்டிக்கின்றோம்.

இது போராளிகளின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான விசாரணைகள் மூலம் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், ஜனநாயக ரீதியில் அவர்களின் செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும். 

ஏனெனில் எமது மக்களுக்கானதும், போராளிகளுக்குமான ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்தே வருவோம். எனவே விசாரணைகள் என்ற பெயரில் இது போன்ற அச்சுறுத்தல்களை இலங்கை அரசு உடன் நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Posts