பயங்கரவாதத்துடன் இணைத்து பேச்சு: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அங்கு தீவிர பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதில் பயங்கரவாதத்தை காங்கிரஸ் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ரன்தீப் சுர்ஜே வாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் உரையின் முழு தொனியிலும் எங்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தாலும், இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் பிரதமரால் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான முற்றிலும் முன்னோடியில்லாத, தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதை சுட்டிகாட்ட விரும்புகிறோம்.
இது தடுக்கப்படாமல், பதிலளிக்கப்படாமல், தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது. மோடியின் இந்த ஆபத்தான மற்றும் வெட்கக்கேடான மீறல்களில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான மற்றும் சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை கூறி வாக்காளர்களை தவறாக வழி நடத்த முயன்றார். 140 வருட பழமையான கட்சியின் தியாகம் மற்றும் பாரம்பரியத்தை பொய்யாக களங்கப்படுத்த அவ நம்பிக்கையான முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளனர். மேலும் பிரசாரத்தில் மோடி பேசிய உரையின் நகல்களை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கொடுத்துள்ளது.
அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.